தமிழ் புத்தக விமர்சனம் - உணவின் வரலாறு - பா.ராகவன்
உணவின் வரலாறு – மனிதனின் வரலாற்றை திரும்பி பார்த்தால் உணவுக்கென்றே ஒரு சகாப்தம் இருக்கிறது என சொல்லலாம். ஆதிகால மனிதன் தோன்றியது முதல் இன்றுவரை உணவுக்காக மனிதன் போராடிக் கொண்டேதான் இருக்கிறான் என்று சொல்லலாம். நவீன அறிவியல் உலகில் அணைத்து துறைகளிலும் நிறைய முன்னேற்றங்கள் வந்திருந்தாலும் பசி என்னும் உணர்வை உணவு தவிர வேறெந்த ஒரு உணர்வாலும், பொருளாலும் முழுமைப்படுத்த முடியாது. ஏனென்றால் மனிதனின் உடல் இயக்கங்களும், உடல் ஆரோக்கியமும் முழுமையாக உணவை சார்ந்தே இருக்கிறது. இந்த உணவுக்காகத்தான் மனிதன் தன் உடலையும் வருத்தி வேலை செய்கிறான்.
ஆதிகால மனிதன் எப்படி உணவை கண்டுபிடித்தான்? முதலில் ஆதிகால மனிதன் உணவை பச்சையாகவே சாப்பிட்டான் பிறகு தீயை கண்டு பிடித்ததும் அதில் சுட்டு சாப்பிட கற்றான். அதை தொடர்ந்து பாத்திரங்களை பயன்படுத்தி சமைக்க கற்றான். உணவிலும் புதுமைகளை புகுத்தினான். நாகரீகம் மாற மாற மனிதனின் உணவிலும் மாற்றங்கள் அதிகம் ஏற்பட்டன. ஆரோக்கியத்திற்காக உணவை சாப்பிடாமல், சுவைக்காக உணவு உண்ணும் வழக்கம் நம்மிடையே புது நாகரிகமாக வளர்ந்து உள்ளது.
இதை குறையாகவும் சொல்ல முடியாது. ஏனென்றால் ருசி இன்றி எந்த உணவையும் சாப்பிட முடியாது இல்லையா! ஆகவே பசி எவ்வளவு முக்கியமோ அதே அளவு ருசியும் முக்கியம். இப்படி உணவை பற்றிய தகவல்கள் மற்றும் மனிதன் எப்படி உணவோடு பிணைந்து இருக்கிறான் என்பதை பற்றிய வரலாற்றை கூறும் நூல்தான் “உணவின் வரலாறு”. அப்படி இந்த நூலில் என்னென்ன சிறப்புக்கள் இருக்கிறது என்பதை பற்றி இந்த பதிவேட்டில் பார்ப்போம்.
பா. ராகவனின் “உணவின் வரலாறு” ஒரு பார்வை :
“உணவின் வரலாறு” இந்த புத்தகத்தின் ஆசிரியர் பா. ராகவன் உணவின் தேவைகளையும், அதன் வகைகளையும், தன்மைகளையும் தெளிவாக தன் எழுத்து வடிவில் சொல்லி இருக்கிறார். இந்த புத்தகத்தின் எழுத்து நடை படிப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். அந்த அளவிற்கு சொற்கள் தடை இல்லாமல் சரளமாக இருக்கிறது.
முன்னுரை தொடங்கி முடிவுரை வரையிலும் தடை இல்லாமல் சொற்கள் படிப்பதற்கு எளிமையாக இருக்கிறது. இதில் கடவுளும் கடா மார்க்கும் என்ற அத்தியாயத்தில் தொடங்கி கற்பனையின் முதல் கன்னி வரை 43 அத்தியாயங்கள் இருக்கின்றது. ஒவ்வொரு அத்தியாயத்தை படிக்கும்பொழுதும் ஒவ்வொரு உணர்வு தோன்றுகிறது. உதாரணமாக சோமரசம் அத்தியாயத்தை படிக்கும்போது ஆட்டம் போட வைக்கிறது, தித்திக்கும் தீ அத்தியாயத்தில் அனல் பறக்கிறது, தேனும் நிலவும் அத்தியாயம் நாவில் எச்சில் ஊற வைக்கிறது புத்தகத்தை படிக்கும்போது இதுப்போன்ற உணர்வுகள் தோன்றுகிறது.
இந்த அத்தியாயத்தில் இதுவரையிலும் நாம் கேள்விப்படாத தகவல்கள் நிறைய இடம் பெற்றுள்ளது. இந்த புத்தகத்தை படிக்கும்போது நிறைய இடங்களில் ஆச்சரியக்குறிகள் இருப்பதை நீங்கள் கவனிக்க முடியும். படிக்கும்போது உங்களையே நீங்கள் அறியாமல் சிரிப்பீர்கள் அந்த அளவிற்கு இந்த புத்தகம் உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது.
ஆதிகால மனிதன் வயிறு நிறைய மட்டுமே மாமிசத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தீ வந்த பிறகுதான் ருசி என்பதை அறிந்தான் என்ற குறிப்பையும், சைபீரியா காடுகளில் உள்ள எப்ரடா என்னும் தாவரத்தில் இருந்து வரும் சோமச்சாறு (சாராயம்) பற்றின குறிப்பையும், தேன் தான் ஆதிமனிதனின் உணவாக இருந்தது அதுமட்டுமின்றி பண்டைய காலங்களில் கிரேக்க, ரோமானிய நாடுகளில் தேன்தான் திருமணத்திற்கு சாட்சியாக இருந்தது என்ற தகவலையும், தேனிலவு என்ற சொல் தமிழிலும் ஆங்கிலத்திலும் எப்படி வந்தது என்ற குறிப்பையும், தீயை கண்டுபிடிப்பதற்கு முன் தேனை அடைய ஆதிகால மனிதன் என்னென்ன உத்திகளை கையாண்டான் என்பதை பற்றி அற்புதமாக குறிப்பிட்டுள்ளார். மேலும் நம் நாட்டில் சாலையோரங்களில் விற்கும் சென்னாமசாலா உலகம் முழுவதும் எப்படிச் சுற்றி வந்தது என்பதை பற்றியும், பின் இட்டலி உருவான கதை, மிளகாயை ஆரம்ப காலத்தில் மக்கள் எப்படி சாப்பிட்டார்கள், மிளகாய்ப்பொடி தயாரிப்பது போன்றவைகளையும், கரும்பு உருவான கதை அது எப்படி உலகம் முழுவதும் பரவியது பின் சர்க்கரை எப்படி தயாரிக்கப்பட்டது. சாக்லேட் எப்படி உருவானது போன்ற அனைத்து சுவைமிக்க பொருட்களின் ஆதிகால வரலாற்றை எல்லாம் தேடி கண்டறிந்து இந்த புத்தகத்தில் வரிவடிவில் வழங்கி இருக்கிறார் பா. ராகவன்.






