-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
கோதைத்தீவு: பெண்கள் மட்டுமே வாழும் ஒரு தீவு - வா.ராமசாமி ஐயங்கார்
இன்றைய சமூகத்தில் பெண்ணிய சிந்தனைகள் அதிகம் பேசப்பட்டு பெண்களுக்கு முன்னுரிமைகளை கொடுத்தாலும் இன்றளவிலும் பெண்கள் சில இடங்களில் அடிமைகளாக நடத்தப்பட்டுத்தான் வருகிறார்கள். ஏன் இந்த நிலை? ஏன் இப்படி நடக்கிறது? என்று எத்தனை முறை வாதிட்டாலும் மீண்டும் தொடக்கத்திலேயே பெண் என்ற ஒற்றை சொல்லிலே வந்து நிற்கிறது பெண்களின் நிலை. இந்த கருத்துக்களுக்கு எதிராக 1950களில் ஆசிரியர்- வா.ராமசாமி ஐயங்கார் அவர்களால் எழுதப்பட்டது தான் கோதைத்தீவு
நடப்புலகில் பெண்கள் நிறைய முன்னேற்றத்தை அடைந்த போதிலும் அவர்களை முன்னுதாரணமாக கொண்டு வளர்ந்து வருபவர்களும் உண்டு, அதையே ஒரு தடையாக கொண்டு முடக்குபவர்களும் உண்டு. குடும்பம், கல்வி, தொழில் போன்றவைகளில் பெண்களுக்கு சம உரிமை கொடுத்தாலும் இன்றளவும் சில இடங்களில் “நீ ஒரு பெண்” என்ற ஒற்றை சொல்லால் பெண்கள் ஆண்களை விட பின்னாடி தள்ளப்படுகிறார்கள்.
இந்த நிலைகளை இன்றைய சமூகச் சூழலில் பேசுவதும்,பாடலாக பாடுவதும், எழுத்து வடிவில் எழுதுவது இயல்பு ஆனால் 1950களில் இந்த கருத்துக்களைப் பற்றி பேசுவதும், எழுதுவதும் பெரும் குற்றமாக இருந்தது. இப்படி இருந்த போதிலும் அன்றைய காலக்கட்டத்தில் வாழ்ந்த வா.ரா. என்கிற ராமசாமி ஐயங்கார் கோதைத்தீவு என்னும் ஒரு புதினத்தை தன் கற்பனை ஆற்றலால் எழுதுகிறார்.
இன்றைய சமூக தேவைக்கு ஏற்ப நிறைய பெண்ணிய சிந்தனை இலக்கிய படைப்புகள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் இன்றைய காலத்துப் பெண்ணிய சிந்தனையோடு இப்புதினத்தை ஒப்பிட முடியாது. ஏனெனில் வா.ரா. வின் சமகால நாவலாசிரியர்களின் பிற்போக்குத் தனங்களை எல்லாம் மிஞ்சும் வகையில் இந்த நாவல் முற்போக்கு தன்மைகள் உயர்ந்து இருக்கும் என்றே சொல்லலாம். அப்படி என்ன இருக்கிறது இந்த நாவலில் அவருடைய பெண்ணிய சிந்தனையைக் காண்போம் .
கோதைத்தீவு - ஒரு குறிப்பு
அகசிந்தனைக்கு முதன் முதலில் கலை வடிவம் கொடுத்தவர் சர் தாமஸ் மூர் ஆவார். இவர் எழுதிய “யூடோபியா” என்னும் நாவலில் அரசியல், சமூக அமைப்புகள் எந்தவித தவறும் இன்றி செயல்படும் ஒரு அற்புத தீவைக் கற்பனையாக படம் பிடித்துக் காட்டினார்.
இவரை முன்னோடியாக கொண்டே பல உயர்கனவு நாவல்கள் வெளியிடப்பட்டது. இவ்வரிசையில் தமிழ் நாவல் வரலாற்றில் வந்த முதல் நாவல் வா.ரா. வின் கோதைத்தீவு. விடுதலை மற்றும் சீர்திருத்த இயக்கங்களை ஒருங்கிணைப்பதில் ஆர்வம் கொண்டிருந்த இவர் பெண்ணிய சமத்துவத்தை கருப்பொருளாகக் கொண்டு தன் நாவலில் வலியுறுத்தினார்.
பெண்மைக்கு முன்னுரிமை தரும் சமூகம் இருந்தால் எந்தமாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதே இந்த நாவல். கோதைத்தீவு முழுவதும் பெண் சுதந்திரத்தையே பேசியுள்ளார் வா.ரா. இந்த தீவை உருவாக்கியதும் பெண்கள்தான். இதில் முதன் முதலில் நூறு பெண்கள் குடியேறினர். பின் அதிக அளவில் பெண்கள் அத்தீவை வந்தடைந்து ஒரு நகராக மாற்றினார்கள்.
பத்து ஆண்டுகளுக்கு பிறகு பெண் விடுதலையை ஆதரிக்கும் ஆண்கள் இந்த நகரத்திற்கு வந்தனர். இவர்கள் நூறு கன்னிமார்கள் வகுத்த சட்டத்தின்படியே நடந்து அங்கிருக்கும் பெண்களை திருமணம் செய்து கொண்டனர்.
கோதைத்தீவு-ன் சட்டங்கள் என்னவென்றால் பயிர் தொழில் மற்றும் இராணுவம் இரு பாலருக்குமே கட்டாயம் அதேபோல் சமையல் மற்றும் வீட்டு கடமைகளும் இரு பாலருக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். அது மட்டுமின்றி அரசியல், சமயம், போர்த்தொழில் இதிலும் சம பங்கு உண்டு. விதவை திருமணத்திலும் ஒரு புதுமையை சொல்கிறார் வா.ரா. கணவனை இழந்த பெண் மூளி என்று சொல்லப்பட்டால் மனைவியை இழந்த ஆணை மோழை என மாற்றி பெயரளிகிறார்.
இங்கும் மறுமணம் உண்டு இந்த மறுமணம் மோழைக்கும், மூளிக்கும் மட்டுமே. பெண்களை இழிவு படுத்தும் புராணங்களும், பாடல்களும் இந்த தீவில் தடை செய்யப்பட்டுள்ளது.
மக்கள் அனைவருக்கும் ஒரே வகையான வீடு, நில ஒதுக்கீடு, நிர்வாக சீர்திருத்தம் என்று பல புதுமைகள் இந்த நாவலில் உள்ளன. இந்த தீவில் நடக்கும் கற்பனை நிகழ்வுகள் வேறு எங்கும் காண முடியாத அதிசயங்கள் என்றே கூறலாம். இப்படி ஒரு பெண்ணியம் பேசும் நாவல் 50 களில் வந்தது என்றால் கொஞ்சம் வியக்கத்தான் வைக்கிறது. “கோதைத்தீவு” பெண்ணியம் பேசும் ஒரு அழகான நாவல்








