State Bank Of India | Electoral Bonds: அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு தேர்தல் பத்திர விற்பனை திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த ஆண்டு மட்டும் ரூ.10,246 கோடி ரூபாய்க்கு தேர்தல் நிதி பத்திரங்களை விற்பனை செய்துள்ளதாக எஸ் பி ஐ வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இது 400% அதிகமாக தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகி உள்ளது என்று பாரத ஸ்டேட் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி ரிசர்வ் வங்கியால் வெளியிடும் தேர்தல் நிதி பத்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட வங்கி கிளைகளில் அவ்வப்போது விற்பனை செய்யப்படும். இந்தியாவில் பாரத ஸ்டேட் வங்கியில் மொத்தம் 29 கிளைகளில் இந்த தேர்தல் நிதி பத்திரங்கள் கிடைக்கும்.
இந்திய குடிமகனாக உள்ள யார் வேண்டுமானாலும் தனியாகவோ அல்லது பிற நபர்களுடன் சேர்ந்து கூட்டாகவோ தேர்தல் நிதி பத்திரங்களை வாங்கி கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கலாம். சட்டசபை அல்லது நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே இந்த பத்திரங்களை (Electoral Bonds) பெற முடியும். அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் உள்ள தங்களது வங்கி கணக்கில் இந்த பத்திரங்களை (Electoral Bonds) செலுத்தி பணமாக மாற்றிக்கொள்ள இயலும். இத்திட்டத்தில் நன்கொடை அளித்தவர் யார் என்றே தெரியாது.
Electoral Bonds - ஆயிரம் கோடிக்கு மேல் விற்பனை :
இந்நிலையில் இந்த தேர்தல் நிதி பத்திரத் திட்டத்தின் செல்லுபடியை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதன்பிறகு இரண்டு நாட்களுக்குப் கழித்து நவம்பர் 4 அன்று மத்திய அரசு தேர்தல் பத்திர விற்பனையை மீண்டும் அறிவித்தது. தற்போது நடந்து முடிந்த மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தலை ஒட்டி தேர்தல் நிதி பத்திரங்கள் விற்பனை சூடுபிடித்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இது 400% அதிகமாக விற்பனையாகி உள்ளது என்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தரவுகள் தெரிவிக்கின்றன.
தகவல் அறியும் உரிமை Right To Information (RTI) சட்டத்தின் கீழ் எஸ்.பி.ஐ வங்கியின் தரவுகளில் நவம்பர் 6 முதல் நவம்பர் 20 வரை நடைபெற்ற சமீபத்திய (29வது) தேர்தல் பாத்திரங்கள் விற்பனையின் போது ரூ.10,246 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டு பணமாக்கப்பட்டன என்பதைக் காட்டுகிறது. மேலும் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் விற்பனை மூலம் மொத்த தொகையில் 99 சதவீதம் பணம் திரட்டப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரத் திட்டத்தின் கீழ் சமீபத்திய விற்பனை (29வது) தேர்தல் தெலுங்கானாவின் தலைநகரான ஐதராபாத்தில் (ரூ. 359 கோடி) மும்பையில் (ரூ 259.30 கோடி) மற்றும் டெல்லியில் (ரூ 182.75 கோடி) அதிகமாக விற்பனையாகியுள்ளது.
தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் ஜெய்ப்பூரில் (ராஜஸ்தான்) ரூ.31.50 கோடிக்கும் ராய்ப்பூரில் (சத்தீஸ்கர்) ரூ.5.75 கோடிக்கும் போபாலில் (மத்தியப் பிரதேசம்) ரூ.1 கோடிக்கும் சேர்த்து தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டன. இருப்பினும் இந்த மூன்று மாநிலங்களில் பணமதிப்பீடு எதுவும் பதிவு செய்யவில்லை. மேலும் மிசோரம் மாநிலத்தில் எந்த விற்பனையும் பதிவு செய்யப்படவில்லை. இந்த தேர்தல் நிதி திட்டம் பெயர் தெரியாததற்கு உத்தரவாதம் அளிப்பதால் நன்கொடையாளர்கள் மற்றும் பெறுநர்கள் பெயர்கள் தெரியவில்லை. ஆனால் அதிக நிதி ஐதராபாத் மற்றும் மும்பை மற்றும் டெல்லியில் இருந்து வந்ததாகவும் அதுவும் குறிப்பாக தேசியக் கட்சிகளைச் சுட்டிக்காட்டி டெல்லியில் கட்சிகளுக்குச் சென்றதாகவும் தரவுகள் தெரிவிக்கிறது. 2018 ஆம் ஆண்டு முதல் 29 கட்டங்களாக தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் சேகரித்த மொத்தத் தொகை தற்போது வரை 15,922.42 கோடியாக உயர்ந்துள்ளது.