Gistak Media

India vs Bangladesh : ஆசிய கோப்பை வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு (India vs Bangladesh) தகுதி பெற்றுள்ளது. 17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. ஆசிய கோப்பை லீக் சுற்றின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றன. இந்த சூப்பர் 4 சுற்றில் நான்கு அணிகளும் தங்களுக்குள் தலா 1 முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்நிலையில், புதன்கிழமை துபாயில் நடைபெற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்தியா முதலில் பேட்டிங்

இந்நிலையில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஜேக்கர் அலி பவுலிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து இந்திய அணி தரப்பில் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த நிலையில் சுப்மன் கில் 29 ரன்னில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களத்திற்கு வந்த ஷிவம் துபே 2 ரன்னுக்கு அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். எனினும் தொடக்கம் முதல் களத்தில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 75 ரன்களுடன் வெளியேறினார். பிறகு களமிறங்கிய கேப்டன் சூரியகுமார் யாதவ் 5 ரன்னில் வெளியேறியதுடன், அவரை தொடர்ந்து வந்த திலக் வர்மாவும் 5 ரன்னில் அவுட் ஆனார். இருப்பினும் சிறப்பாக ஆடிய ஹர்திக் பாண்டியா 38 ரன்கள் எடுத்த நிலையில் போட்டியின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து, வங்கதேச அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

வங்கதேசம் தோல்வி (India vs Bangladesh)

India vs Bangladesh - Gistakmedia

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய வங்கதேச அணி வீரர்கள் தொடக்க முதலே அதிரடியாக ஆடினாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்து ரன் சேர்க்க போராடியது. மேலும் அந்த அணியில் தனி ஒருவனான போராடிய  சைஃப் ஹாசன் 69 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசிவரை விக்கெட் சரிவை மீட்க போராடிய வங்கதேச அணி 19.3 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியது. இந்நிலையில் வங்கதேச அணியை 41 ரன்கள் (India vs Bangladesh) வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்று, ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக நுழைந்துள்ளது. இந்திய அணியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, வருண் சகரவர்த்தி தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர்.

இரு அணிகளின் பிளேயிங் லெவன் பட்டியல்

இந்தியா: திலக் வர்மா, அபிஷேக் சர்மா, சுப்மன் கில், ஷிவம் துபே, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சகரவர்த்தி. 

வங்கதேசம்: ஜேக்கர் அலி (கேப்டன்), சைஃப் ஹாசன், தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன், தவ்ஹித் ஹ்ரிடோய், ஷமிம் ஹொசைன், முகமது சைபுதீன், ரிஷாத் ஹொசைன், ஹசன் சாகிப், நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top