சர்வதேச தொழிலாளர் தினமான (May Day History) மே தினம் ஆனது அனைத்துத் துறைகளிலும் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்புகளையும் மற்றும் உரிமைகளையும் போற்றுகின்ற தினமாகும். மேலும் இந்த நாள் ஆனது தொழிலாளர்களின் உரிமைகள், தொழிலாளர்களின் நியாயமான ஊதியம் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பான சூழல்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மே தினம் தோற்றம்
தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 15 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய கட்டாயப்படுத்துவதை எதிர்த்து “8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம்” என்ற 8 மணி நேர வேலைக் கோரிக்கை கோஷத்துடன், தொழிலாளர்கள் தங்களின் உரிமைக்காகப் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில், 1886 ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி போராடத் தொடங்கினர். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் மே 3 – 4 தேதிகளில் போராட்டம் அதன் உச்சகட்டத்தை அடைந்தது. சிகாகோவின் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பல தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர், மற்றும் பலர் படுகாயமடைந்தனர். இந்த நிகழ்வு ஆனது தொழிலாளர் இயக்கத்தின் ஒரு அழியாச் சின்னமாக மாறியது.
பாரீஸில் 1889-ல் நடந்த சர்வதேச தொழிலாளர் நாடாளுமன்ற கூட்டத்தில் (May Day History) இந்த 1886-ன் மே 1-ஆம் தேதி சிகாகோ போராட்டத்தை நினைவு கூறும் விதத்தில் இனி வரும் வருடங்களில் மே 1-ஆம் தேதியை உலகளாவிய தொழிலாளர் தினமாக கொண்டாட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
மே தினம் முக்கியத்துவம்
- காவல்துறையின் வன்முறையை எதிர்கொண்டு 8 மணி நேர வேலை நேர உரிமைக்காக போராடி உயிர்நீத்த தியாகிகளைப் (தொழிலாளர்களைப்) போற்றி அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் நாள்.
- தொழிலாளர்கள் தங்களின் அசராத எதிர்ப்பு மற்றும் அயராத போராட்டத்தின் மூலம் 8 மணி நேர வேலைக்கான உரிமையை சட்டபூர்வமாக வென்றெடுத்த நாள்.
- தொழிலாளர்களின் அயராத உழைப்பால் மற்றும் வியர்வையால்தான் இந்த உலகமானது இயங்குகிறது என்பதை உலகுற்கு உணர்த்தும் நாள்.
- உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் எந்தவித பேதமும் இன்றி தங்களின் ஒன்றிணைந்த பலத்தைக் காட்டும் நாள்.
May Day History : மே தினம் கொண்டாட்டம்
- தொழிலாளர்களின் கடின உழைப்பைக் கௌரவிக்கும் ஒரு முக்கிய நாளாக கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் உள்ள 160 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த நாளை ஒரு பொது விடுமுறை நாளாகக் கொண்டாடுகின்றன.
- தொழிலாளர் சங்கங்கள் சார்பில் கொடிகள் ஏற்றப்படுகின்றன.
- தொழிலாளர்களின் நியாயமான ஊதிய கோரிக்கை, பாதுகாப்பான பணிச்சூழல், வேலைப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துகின்ற பேரணிகள், மற்றும் அணிவகுப்புகள் நடத்தப்படுகின்றன.
- தொழிலாளர் சங்கங்கள் பொதுக்கூட்டங்களை நடத்தி தொழிலாளர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு உரைகளை முன்னிலைப்படுத்துகின்றன.
- சிறந்த தொழிலாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக விருதுகள் வழங்கப்படுகின்றன.
- தொழிலாளர் சங்கங்கள் அரசாங்கங்களுக்கும் மற்றும் முதலாளிகளுக்கும் தொழிலாளர்களின் உரிமைகளை நினைவூட்டவும் இந்த நாளை சிறந்த முறையில் பயன்படுத்துகின்றன.