Pichaikkaran 2 Movie Banned: பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்கு தடை
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தானே இயக்கி நடித்திருக்கும் படம் பிச்சைக்காரன்-2. இப்படத்தில் அவருடன் காவ்யா தாபர், ரித்திகா சிங், மன்சூர் அலிகான், ராதாரவி, ஜான் விஜய், தேவ் கில் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர் நிதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ராஜகணபதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது. “மாங்காடு மூவிஸ் தயாரிப்பில் நடிகரும் இயக்குனருமான ஆர்.பாண்டியராஜன் இயக்கிய “மூளை” என்ற பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் பின்னர் “ஆய்வுக்கூட்டம்” எனப் பெயர் மாற்றப்பட்டது. இப்படம் 2014-ல் சென்சார் சான்றிதழ் பெற்று 2016-ல் வெளியானது.
இந்த படம் கரு மூளை மாற்று அறுவை சிகிச்சையை தொடர்புடைய கதையாகும். தற்போது நடிகர் விஜய் ஆண்டனி தனது திரைக்கதையை காப்பி செய்து ‘பிச்சைக்காரன் 2’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் பிப்ரவரி 10ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தை எங்கள் அனுமதியின்றி ‘ஆய்வுக்கூட்டம்’ கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதால், இந்த படத்தை எந்த தளத்திலும் வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும் எங்கள் நிறுவனமான மாங்காடு மூவிஸ் நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாக ரூபாய் 10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும்,” என்றார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.செளந்தர் விசாரித்து வருகிறார். தமிழ் புத்தாண்டில் வெளியிட திட்டமிட்டிருந்த படம் வெளியாகவில்லை. இப்படம் மே மாதம் திரைக்கு வர உள்ளது. படத்தை தடை செய்யக் கூடாது என்று விஜய் ஆண்டனி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் இது பற்றிய விசாரணை ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.








