தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று இந்த பொங்கல் பண்டிகை ஆகும். இது சூரியனின் வடக்கு நோக்கிய பயணத்தின் தொடக்கத்தையும் மற்றும் குளிர்கால (Pongal 2026) சங்கிராந்தியின் முடிவையும் குறிக்கும் விழா ஆகும். இந்த விழா வருடந்தோறும் செழிப்பு மற்றும் புதுப்பித்தலைக் குறிக்கும் தமிழ் மாதமான தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சிறப்பு வாய்ந்த பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகை ஆனது போகித் திருநாள், அறுவடைத் திருநாள், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என 4 நாட்களில் கொண்டாடப்படுகிறது. இந்த 2026 ஆம் ஆண்டில், ஜனவரி 14 முதல் 17 வரை பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.
போகித் திருநாள்
இந்த பொங்கல் பண்டிகையின் முதல் நாள் போகியுடன் தொடங்குகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற சம்ப்ரதாயத்திற்கு ஏற்ப வீடுகளில் உள்ள தேவையற்ற பொருட்கள் மற்றும் தட்டு முட்டுச் சாமான்கள் அகற்றப்படுகின்றன. தெருவின் கோடிகளில் மற்றும் ஊர் எல்லைகளில் அவை குவிக்கப்பட்டு தீ மூட்டி எரிக்கப்படுகின்றன.
அறுவடைத் திருநாள்
இந்த பொங்கல் பண்டிகையின் 2-ம் நாள் அறுவடைத் திருநாள் ஆகும். இது சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தும் பண்டிகை ஆகும். இது சூரிய உதய நேரத்தில் மக்கள் குளித்து புதிய உடைகள் அணிந்து புதிய மண் பானைகளில் வெட்டவெளியில் இனிப்புப் பொங்கல் சமைப்பதன் மூலம் இந்த பொங்கல் நாள் தொடங்குகிறது. ஒரு இலையில் பழங்கள், காய்கறிகள், இனிப்புகள் மற்றும் புஸ்பங்கள் வைத்து சூரியக் கடவுளுக்கு படையல் இடப்படும். மண் பானைகளில் பொங்கல் பொங்கி வரும் போது மக்கள் “பொங்கலோ பொங்கல்” என்ற கோஷங்களுடன் சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிப்பர்.
மாட்டுப் பொங்கல் (Pongal 2026)
இந்த பொங்கல் பண்டிகையின் 3-ம் நாள் மாட்டுப் பொங்கல் ஆகும். பசுக்களை குளிப்பாட்டி மஞ்சள், குங்குமம், மாலைகள் சூடி சிறப்பு உணவுகள் அளித்து கௌரவிப்பர். இது பசுக்களின் விவசாயப் பங்கை அங்கீகரிக்கும் ஒரு செயலாகும். இந்த மாட்டுப் பொங்கல் நாளில் ஜல்லிக்கட்டு (காளையை அடக்குதல்) போன்ற நிகழ்வுகள் கிராமப்புறங்களில் நடைபெறுகின்றன.
காணும் பொங்கல்
மக்கள் தங்கள் குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்களுடன் ஒன்று கூடி, ஆற்றங்கரை, கடற்கரை, கோவில் குளங்களுக்கு சென்று நடனங்கள் மற்றும் வேடிக்கையான செயல்பாடுகளுடன் பொழுதைக் கழித்து மகிழ்வார்கள். பெண்கள் தங்கள் சகோதரர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வார்கள். இது உறவுகளை வலுப்படுத்தும் செயலாகும்.