கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகம் பற்றிய ஒரு பார்வை
Ponniyin Selvan Book Review: காலம் கடந்து இன்றளவும் தமிழ் மொழி பல எழுத்தாளர்களையும், படைப்பாளிகளையும் உருவாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. சில எழுத்தாளர்களின் மூலம் தமிழே பெருமை கொண்டுள்ளது என்று சொல்லலாம் அதற்கு ஏற்ப சில எழுத்தாளர்கள் தங்களின் எழுத்துக்களின் மூலம் சிறந்து விளங்கியுள்ளனர். இவர்களில் தலைசிறந்தவர், தலைமுறைகள் பல கடந்தவர், சரித்திர கதைகளின் தலைவன், நாவல்களின் அரசன், வரலாற்று கதைகளுக்கு உயிர்கொடுத்த பிரம்மன் இத்தனை சிறப்புகளுக்கெல்லாம் தகுதியுடையவர் சாகாவரம் பெற்ற படைப்புகளின் மூலம் அமரத்துவம் பெற்றவர் இவர்தான் கல்கி கிருஷ்ணமூர்த்தி இவரது படைப்பில் உருவானதுதான் பொன்னியின் செல்வன் புத்தகம் (Ponniyin Selvan Book).
வருடங்கள் பல சென்றாலும் மதிப்பு குறையாத ஒரு சில புத்தகங்களில் இதுவும் ஒன்று. கல்கி எழுதிய புகழ் பெற்ற ஒரு புதினம் பொன்னியின் செல்வன் புத்தகம் (Ponniyin Selvan Book). இந்த புதினம் பல உண்மை நிகழ்வுகளையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கப்பட்டது. இந்த கதை 1950 முதல் 1955 ம் ஆண்டுவரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இந்த புதினத்திற்கு கிடைத்த மக்களின் ஆதரவினால் இது புத்தகமாக வெளியிடப்பட்டது. கி.பி 1000 ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சோழ சாம்ராஜ்யத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கதை எழுதப்பட்டுள்ளது.
சோழர்களின் சாம்ராஜ்யம் மிகவும் பெரிய சாம்ராஜ்யம். இந்த சாம்ராஜ்யத்தைப் பற்றிய வரலாற்றை எழுதுவது என்பது மிகவும் கஷ்டம். இதனால் கல்கி அவர்கள் என்ன செய்திருக்கிறார் என்றால் அதிலிருந்து ஒரு சிறிய பகுதியை மட்டும் எடுத்திருக்கிறார்.
சோழ பேரரசர்களில் ஒருவரான சுந்தர சோழர் தனக்கு பிறகு தன்னுடைய இரு மகன்களான ஆதித்த கரிகாலன், அருள் மொழிவர்மன் இவர்களில் யாராவது ஒருவர் தனக்கு பிறகு அரியணையில் அமர்த்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் ஆதித்ய கரிகாலன் பகைவர்களின் சூழ்ச்சியால் கொல்லப்படுகிறார்.
அருள்மொழி வர்மனும் எனக்கு அரியணையின் மேல் ஆசை இல்லை என்று கூறி தனது சித்தப்பாவிற்கு அரியணையை விட்டுக்கொடுக்கிறார். இந்த கால கட்டத்தைதான் தனது கதைக்கான கருவாக கல்கி அவர்கள் தேர்வு செய்துள்ளார். இந்த கதையை எங்கு ஆரம்பிப்பது? எங்கு முடிப்பது? இடையில் என்ன நிகழ்வுகளை சொல்லலாம்? எந்த அளவிற்கு பிரமாண்டமாக சொல்லலாம்? எந்த அளவிற்கு பிரமாண்டமாக சொன்னால் மக்களிடையே நல்ல விதமாக சென்று அடையும் என்பதில் தான் கல்கியின் திறமை அடங்கியுள்ளது.
இந்த நாவலின் தனிச்சிறப்பே பிரம்மாண்டம்தான். ஒரு படத்தை பார்க்கும்போது அதிலுள்ள பிரம்மாண்டத்தை உணர்வது என்பது இயல்பான ஒன்று. ஆனால் வார்த்தைகளில் பிரமாண்டத்தை காண்பது அந்த பிரமாண்டத்தை உணர வைப்பது என்பது மிகவும் கனினமானது. பொன்னியின் செல்வன் புத்தகமானது (Ponniyin Selvan Book) இந்த கதையில் குறிப்பிட்டுள்ள இடங்கள், நிகழ்வுகள், கதைமாந்தர்கள் ஆகியவற்றை வார்த்தைகளால் வாசிக்கும்போது அதிலுள்ள வருணனைகளும், வார்த்தைகளின் கோர்வைகளும் அழகாகவும் பிரமாண்டமாகவும் உணர வைக்கிறது.
பொன்னின் செல்வன் இந்த நாவலில் இன்னொரு சிறப்பு கதை மாந்தர்கள். ஒரு கதைக்கு உயிர் தருவதே அந்த கதையின் கதை மாந்தர்கள்தான். இந்த புதினத்தில் நிறைய கதை மாந்தர்கள் இடம் பெற்றுள்ளனர். அருள்மொழி வர்மனின் பெயரை பொன்னியின் செல்வன் என்று இந்த கதைக்கு பெயர் வைத்திருந்தாலும். வந்தியத்தேவன் தான் நிறைய இடங்களில் கதாநாயகனாக வலம் வருகிறார்.
வீரமும், விவேகமும் மிக்க வந்தியத்தேவன் தனது ஆர்வக்கோளாறினால் நிறையப் பிரச்சனைகளில் மாட்டிக்கொள்கிறார். ஆனால் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் தனது திறமையாலும், அறிவுக்கூர்மையாலும் அந்தப் பிரச்சனைகளில் இருந்து வெளியே வந்துவிடுகின்ற துடிதுடிப்பான இளைஞனாக இந்த கதையில் காண்பிக்கப்பட்டுள்ளார். அடுத்ததாக அருள்மொழிவர்மன் இந்த கதையின் நாயகன். இவருடைய பெயரைத்தான் பொன்னியின்செல்வன் என்று இந்த நாவலுக்கு வைத்துள்ளார்.
அடுத்து குந்தவை சுந்தர சோழரின் மகள் வந்தியத்தேவனின் காதலி. என்னதான் பெரிய மன்னராக சுந்தர சோழர் இருந்தாலும் தன்னுடைய மகளான குந்தவையிடம் தான் எந்த முடிவையும் கேட்பார். அருள்மொழி வர்மனும் தனது அக்காவின் ஆலோசனைப்படிதான் நடப்பார். அந்த அளவிற்கு திறமையான குணாதிசயமாக குந்தவையை சித்தரித்துள்ளார். அடுத்தது பூங்குழலி துறுதுறுப்பான பெண்ணாகவும், படகோட்டும் பெண்ணாகவும் காண்பிக்கப்பட்டுள்ளார். இவர் அருள்மொழி வர்மனை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால் வானதி அருள்மொழி வர்மனை மிகவும் தீவிரமாக காதலிப்பதை கவனிக்கும் பூங்குழலி தனது காதலையும் விட்டு கொடுத்து சேந்தனமுதனை திருமணம் செய்து கொள்கிறார்.
அருள்மொழிவர்மனும், வந்தியத்தேவனும் கடலில் ஒரு ஆபத்தில் மாட்டிக் கொள்ளும்போது பூங்குழலிதான் அவர்கள் இருவரையுமே காப்பாற்றி கரை சேர்கிறார். அடுத்து நந்தினி இந்த நாவலில் புரியாத புதிராகவே கடைசிவரை வரும் கதாபாத்திரம் நந்தினி. இவர் பெரிய பழுவேட்டரையரின் மனைவி.
பழுவேட்டரையர்கள் (பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர்) யார் என்றால் சோழ அரசர்களுக்கு விசுவாசமான அரச குலத்து அதிகாரிகள். இவர்களுக்கு அரச குலத்திற்கு இணையான மதிப்பும், மரியாதையும் மக்களிடையே இருந்தது. அடுத்து ஆழ்வார்க்கடியான் இந்த கதையில் முழுவதுமாகவே வரும் கதாபாத்திரம். வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் சந்திக்கின்ற எல்லா இடங்களிலுமே நமக்கு நகைச்சுவை விருந்தாக அமையும். இவர்களை தவிர்த்து குறைவான கதாபாத்திரத்தில் அனிருத்த பிரம்மராயர், மதுராந்தகன், மந்தாகினி தேவி, செம்பியன் மாதேவி, கந்தமாறன், கந்தமாறனின் தங்கை மணிமேகலை, சம்புவராயன், ரவிதாசன் ஆகிய அத்தனை கதாபாத்திரங்களையும் இந்த நாவல் கொண்டுள்ளது.
பொன்னியின் செல்வனில் இத்தனை கதாபாத்திரங்கள் இருந்தாலும் இந்த புத்தகத்தை வாசிக்கும்போது ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரேயொரு நிகழ்வில் வந்திருந்தாலும் அவர்களாகவே நம் மனதில் நிலைத்து விடுவார்கள் அந்த அளவிற்கு கதைமாந்தர்களின் முக்கியத்துவம் இந்த நாவலில் நிறைந்திருக்கும். நாவலின் மற்றொரு சிறப்பு இதிலுள்ள உறவுமுறைகள். எல்லா உறவுமுறைகளையும் இந்த நாவலில் கல்கி கையாண்டுள்ளார். நட்பு, காதல், பகை, அண்ணன் தம்பி உறவு, அக்கா தம்பி உறவு, தகாத உறவு எப்படி இருக்கக்கூடாது போன்ற எல்லா உறவுகளையும் ரொம்ப அழகாகவும் ஆழமாகவும்,ரசிக்கும் விதத்திலும், படிக்கும் வாசகர்களுக்கு புரியும் வகையிலும் இந்த நாவலில் விளக்கியுள்ளார். கல்கி அவர்கள் இந்த நாவலை ஐந்து பாகங்களாக எழுதியுள்ளார்.
பொன்னியின் செல்வன் புத்தகத்தின் (Ponniyin Selvan Book) கதை சுருக்கம்:
வடதிசையில் உள்ள ஆதித்த கரிகாலர் தஞ்சையில் உள்ள அவருடைய அப்பாவிற்கும், பழையறையில் இருக்கும் தனது தங்கையான குந்தவைக்கும் இங்கு சூழ்நிலை சரியில்லை என்பதை விளக்கி அரச இரகசியங்களை கொண்ட இரண்டு ஓலைகளை அவருடைய நம்பிக்கையான நண்பரான வந்தியத்தேவனிடம் கொடுத்து அனுப்புகிறார்.
வந்தியத்தேவன் சுந்தர சோழருக்கு ஓலை கொடுக்கப்போகும் வழியில் அரியணைக்கு பெரும் சூழ்ச்சி வரப்போகிறது என்பதை அறிந்து கொள்கிறார். பிறகு பல தடைகளையும் தாண்டி சுந்தர சோழரிடம் ஓலையைக் கொடுத்துவிடுகிறார். இதனை தொடர்ந்து குந்தவையை சந்தித்து அவரிடம் ஓலையை கொடுக்கும்போது குந்தவை ஒரு ஓலையை கொடுத்து துன்னுடைய இலங்கையில் இருக்கும் இளைய சகோதரரான அருள்மொழி வர்மனிடம் கொடுக்க சொல்கிறார். வந்தியத்தேவன் கடல் பயணமாக இலங்கைக்கு செல்கிறார். அங்கிருந்துதான் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. வந்தியத்தேவன் எதிரிகளின் சூழ்ச்சியை அறிந்துகொள்கிறார். சுந்தரசோழர், ஆதித்த கரிகாலர், அருள்மொழிவர்மன் இவர்கள் மூவரையும் ஒரே நேரத்தில் கொள்ளவேண்டும் என்று நினைக்கும் பாண்டியர்களின் சதி ஒரு பக்கம், சோழ அரசர்களுக்கு விசுவாசமான பெரிய பெரிய அரச அதிகாரத்தில் இருக்க கூடிய பழுவேட்டரையர்களின் சதி மறு பக்கம்.
நந்தினியின் சூழ்ச்சி ஒரு பக்கம் இது எல்லாத்தையும் கடந்து வந்தியத்தேவன் அருள்மொழி வர்மனை பார்த்து ஓலையை கொடுக்கிறாரா? அதீத கரிகாலன் எப்படி இறக்கிறார்? அருண்மொழி வர்மன் அரசப் பதவியை யாருக்கு விட்டுக் கொடுக்கிறார்? இது போன்ற பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியதுதான் இந்த புகழ்மிக்க பொன்னியின் செல்வன். ஒவ்வொரு நிகழ்வுகளையும் படிக்கும்போது அந்த நூற்றாண்டிற்க்கே பயணம் செய்யும் உணர்வை கல்கி அவர்கள் துந்துள்ளார். இந்த நாவலைப் படிக்கும்போது நம் முன்னோர்களின் கலாச்சாரம், வாழ்வியல் முறை, அரசாளும் தன்மை போன்றவைகளை நாம் அறிந்து பெருமை கொள்ளும் அளவிற்கு இந்த நாவல் அமைந்துள்ளது.








